Sunday, 3 February 2019

சில சமையல் / வீட்டுக் குறிப்புகள்


                சில சமையல் / வீட்டுக் குறிப்புகள்

1.  சேமியா பாயாசம் போது, குழைந்து விட்டால், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித் தனியே வந்துவிடும்.

2. சப்பாத்தி இரவு வேண்டுமானால் காலையிலும், காலை வேண்டுமானால் இரவிலும் பிசைந்து உடனே குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டு சப்பாத்தி சுடுவதற்கு ஒரு மணி நேரம்  முன் எடுத்து செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

3. இட்லிக்கு ஊற வைக்கும் போது, அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, சுடு தண்ணீரில் ஊற வைத்தால் இட்லி மிருதுவாகப் பஞ்சு போல வரும்.

4. காரக் குழம்பு/ வத்தல் குழம்பு இரண்டுக்கும் துவரம் பருப்புப் போட்டுத் தாளித்தால் குழம்பு மணமாக இருக்கும்.

5.  இஞ்சியை நறுக்கிய 9 மணி நேரத்திற்குள்ளும், பூண்டை நறுக்கிய ½ மணி நேரத்திற்குள்ளும் பயன் படுத்த வேண்டும்.

6. வாழைக்காய் நறுக்கும் போது ஏற்படும் கறையைப் போக்க, கஞ்சித் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கழுவ கறை மறைந்து விடும்.

7. தானியங்களை (பயறு வகைகள்) 8 மணி நேரம் ஊற வைத்து,  தண்ணீரை வடித்து, ஹாட் பேக்கில் போட்டு மூடி வைத்து, மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தாயார். முளை கட்டிய தானியங்களில் வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன.

8. பாகற்காய் குழம்பு வைக்கும் போது, அதில் ஒரு காரட்டையும் சேர்த்துப் போட்டால் குழம்பில் கசப்புத் தெரியாது.

9. மிளகாய் வற்றல் வறுக்கும் போது, அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

10. பூண்டு உரிப்பதற்கு முன் குளிர்ந்த நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு ஊறிய பிறகு எடுத்தால் தோல் எளிதாக வந்து விடும்.

11. பஜ்ஜி மாவில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு காய்ச்சி சேர்த்த பிறகு அதில் பஜ்ஜி தயாரித்தால் எண்ணெய் ஒட்டாமலும், உப்பியும் வரும்.

12. கோதுமை மாவை அரைத்து சலித்ததும், சிறிது டேபிள் சால்ட்டைக் கலந்து வைத்தால் வண்டு வராது.

13. வாழைக்காயைத் தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காமல் புதியதாய் இருக்கும்.

14. ஃபிளாஸ்க்குகளை நீண்ட நாள் உபயோகப்படுத்தாமல் வைத்தி ருக்கும் போது அதில் சிறிதளவு சர்க்கரை போட்டு வைத்தால் அதில் துர் நாற்றம் வராது.

15. அப்பளம், வற்றல், வடகம்  இவற்றுடன் காய்ந்த மிளகாய் சிலவற் றையும் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

16. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி பிஸ்கட்டை வைத்தால், பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

17. பருப்புப் பொடி அரைக்கும் போது, இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும் இருக்கும். ஜீரணத்திற்கும் நல்லது.

18. பலகாரங்கள் செய்ய்யும் போது, வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சும் போது, பாகு நன்றாகக் கொதித்து வரும் போது சிறிது பாலை ஊற்றுங்கள். வெல்லத்தில் உள்ள அழுக்குகள் மேலே மிதக்கும். அவற்றைத் தனியே எடுத்து விடலாம்.

19. கொழுக்கட்டை பிசையும் போது, நீருடன் சரிபாதி பால் ஊற்றினால், கொழுக்கட்டை கூடுதல் சுவையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

20. பாத்திரத்தில் முதலில் சிறிது தண்ணீர் விட்டுப் பிறகு பால் விட்டுக் காய்ச்சும் போது, பாத்திரத்தில் பால் ஒட்டாது.

21. கண்ணாடி மற்றும் ஜன்னல்களைத் துடைக்கும் போது, துணிக்குப் பதிலாக நியூஸ் பேப்பர் வைத்துத் துடைத்தால் கண்ணாடியில் கீறல் விழுவதைத் தவிர்க்கலாம்.

22. வெண்ணெய் காய்ச்சும் போது அதில் முருங்கை இலை போட்டால் அல்லது இறக்கிய பின் அரை ஸ்பூன் வெந்தயம் போட்டால் நெய் கம கம என்று மணக்கும்.

23. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஐந்து சொட்டு நல்லெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.

24. உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்சியில் ஒரு ஸ்பூன் நெல்லெண்ணெய் விட்டு தடவிக் கொண்டு பிறகு உளுந்து போட்டு அரைத்தால் மிக்சி ஓரங்களில் மாவு ஒட்டாமல் வரும்.

25. மோர்க்குழம்பு வைக்கும் போது கடைசியில் சிறிதளவு பாலை ஊற்றி கொதிக்க வைத்தால் கூடுதல் சுவையாகவும், புளிப்பில்லாமலும் இருக்கும்.

26. பிரியாணி செய்ய்யும் போது ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால் சுவையாகவும் இருக்கும். அரிசி உதிர உதிரியாகவும் இருக்கும்.

27. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால்  வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

28. தோசை மாவு புளித்து விட்டதா ? சிறிது சுட வைத்த பால் கலந்து தோசை வார்த்தால் புளிப்பு தெரியாது..

29. இட்லி மாவு புளித்து விட்டால், அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலக்கி வைத்தால், சிறிது நேரம் கழித்து மாவின் மேல் தண்ணீர் தெளிவாக நிற்கும். அதை வடித்து எடுத்து விட்டால் புளிப்பு போய் விடும்.

30. மாவில் சீடை செய்தபின், சீடையை ஊசியால் குத்திய பிறகு, எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் இருக்கும்.

31. துணிகளில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டால் விபூதியை அந்த துணியின் மீது கொட்டி நன்றாகக் கசக்கிய பிறகு துவைத்தால் கறை போய்விடும்.

32. காய்ந்த மிளகாயை வறுக்கும் போது, அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்தால் அதனுடைய காட்டம் தெரியாது. நமக்கு தும்மலும் வராது.

33. உருளைக் கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளிப் பாத்திரங்களை சுத்தம் செய்தால் அழுக்கு போய் பளிச்சிடும்.

34. பலகாரங்கள் நமத்துப் போகாமலிருக்க கொஞ்சம் உப்பை முடிச்சுப் போட்டு அதனுடன் வைக்கவும்.

35. பட்டுப் புடவைகளை ஆண்டுக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் இருந்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி, நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

36. தேங்காய், பொரிகடலை சேர்த்து அரைத்த சட்னி மீந்து போய் விட்டால் அதை சாம்பாரில் ஊற்றினால் சுவையாக இருக்கும்.

37. ஊறுகாயை பாட்டில்களில் போடுவதற்கு முன் வெது வெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு பாட்டில் முழுக்க அது பரவும் படி செய்து, பிறகு ஊறுகாயை போட்டு வைத்தால் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.

38. ஊறுகாய் செய்யும் போது, உப்பை லேசாக வறுத்துப் போட்டால், ஊறுகாயின் மீது வெண்மை நிறம் படியாது.  

39.இடியாப்ப மாவு பிசையும் போது, அரை டம்ளர் கொதிக்கும் பாலை விட்டுக் கிளறினால் நல்ல வெள்ளை நிறம் கிடைக்கும்; மிருதுவாகவும் இருக்கும்.

40. மிக்சி பிளேடு கூர்மையாக இல்லமலிருந்தால், அதில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு ஓட விடுங்கள். பிளேடு கூர்மையாகிவிடும்.

41. சர்க்கரை டப்பாவில் ஐந்து கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை இருக்காது.

42. சப்பாத்தி, பூரிக்குப் பிசையும் போது, சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும், மொர மொரப்பாகவும் இருக்கும்.

43. தயிர் புளித்து விடாமல் இருக்க ஒரு சிறிய துண்டு  தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

44. காய்கறிகளை வேக வைக்கும் போது உப்பு போட்டால், அதிலுள்ள இரும்புச் சத்து வீணாகி விடுகிறது. எனவே காய்கறிகளை வேக வைத்த பின் உப்பு போட்டால் இரும்புச் சத்து வீணாகாது.

45. லட்டு பிடிக்கும் போது ஜீராவில் 50 கிராம் நெய் விட்டு பிடியுங்கள். லட்டு நெய்யில் பொரித்தது போலவே சுவையாக இருக்கும்.

46. குலோப்ஜாமூனுக்கு உருண்டைகளைப் பிடிக்கும் போது, கையில் நெய் தடவிக் கொண்டு பிடித்தால் கையில் ஒட்டாது. ஜாமூனும் மணமாக இருக்கும்.

47. பலகாரம் செய்யும் முன்பு, மாவில் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசைந்து, எண்ணெயில் போடுங்கள். பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது.

48. தட்டை மாவில் சிறிது எள்ளும், கறி வேப்பிலையும் சேர்த்துக் கொண்டால், நல்ல மணமாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

49. பாதுஷா செய்ய்யும் பின், பூஸ்டை திக்காகக் கரைத்து, பாதுஷாவின் மீது தெளித்தால் வித்தியாசமான டிசைனில் பாதுஷா தயார்.

50. புழுங்கள் அரிசியைப் பாத்திரத்தில் சமைப்பது நல்லது. குக்கரில் சமைப்பது மாவுச் சத்தையும், கொழுப்பையும் நீக்காது.


Monday, 26 November 2018

திருநெல்வேலி அல்வா


              
                   திருநெல்வேலி அல்வா

தேவையானவை:

சம்பா கோதுமை       : 1/2 கிலோ
சர்க்கரை               : 1 ½ கிலோ
நெய்                   : 1  கிலோ
முந்திரிப்பருப்பு         : 100 கிராம் 

செய்முறை:

தரமான கோதுமையை சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவி குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும். நல்ல தண்ணீர் விட்டு கோதுமையைப் பக்குவமாக அரைக்கவும். சிறிய கண் உள்ள சல்லடையில்    கோதுமைப் பாலை வடிகட்டவும். மூன்று முறை அரைத்துப் பால் எடுத்து வடி கட்டவும். கோதுமைப் பாலை சுமார் 10 மணி நேரம் மூடி வைக்கவும். தெளிவான நீரை சிறிது வடித்து எடுக்கவும். மீதி கோதுமைப் பாலை அகண்ட பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து அரை மணி நேரம் ஓரளவு கட்டியாகும் வரை கிண்டவும். பாத்திரத்தின் மத்தியில் அல்வா திரண்டு வரும் போது சிறிது சிறிதாக நெய்யை விட்டு விடாமல் தொடர்ந்து கிண்டவும்** வறுத்த பாதி முந்திரிப் பருப்புகளைத் தூவவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு திரண்டு வரும். அல்வாவின் மேலே வரும் அதிகப்படியான நெய்யை வடித்து விடலாம். ஒரு மணி நேரம் ஆறியபின் திருநெல்வேலி (இருட்டுக்கடை) அல்வாவைப் பரிமாரலாம் எல்லோரும் ருசிக்கலாம்

** விரும்புபர்கள் அல்வா பவுடர் (கேசரிக்குப் பவுடர் இடுவது போல) சிறிது சேர்க்கலாம்.  

Sunday, 4 June 2017

இரண்டு நிமிட அல்வா

                 இரண்டு நிமிட அல்வா

தேவையானவை:

கோதுமை மாவு      : ஒரு கப்
சர்க்கரை             : ஒரு கப்
நெய்                 : ½ கப்
தண்ணீர்              :1 ½ கப்
முந்திரிப்பருப்பு       : 10
ஏலக்காய் பொடி      : ¼ டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் 
சர்க்கரை, ஏலப்பொடி பொட்டு கொதிக்க விடவும். 
இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியில் முக்கால் 
பங்கு நெய், முந்திரி, கோதுமை மாவு போட்டு சிவக்க 
வறுக்கவும். இது வறுபடுவதற்கும், தண்ணீர்
சர்க்கரை கலந்தது கொதிப்பதற்கும் சரியாக இருக்கும். 
கொதித்த சர்ககரைத் தண்ணீரை வறுத்த மாவில் கொட்டவும். 
மீதி கால் பங்கு நெய்யை கொட்டி கலந்து இறக்கி வைக்கவும் 
2 நிமிடங்களில் சுவையான அல்வா தயார்.


கும்பகோணம் டிகிரி காப்பி

                  கும்பகோணம் டிகிரி காப்பி

தேவையான பொருட்கள்

பக்குவமாக வறுத்து அரைத்த
புதிய காப்பி பவுடர் (சிக்கிரி கலந்தது) – 3 மேசைக் கரண்டி
பால்                                - 1/1/2 கப்
சர்க்கரை                            - 11/2 தேக்கரண்டி
தண்ணீர்                            -  ½ கப்

செய்முறை:
தண்ணீரை குமிழிகள் வரும் வரை கொதிக்க விடவும். மூன்று மேசைக் கரண்டி காப்பி பவுடரை பில்டரில் போட்டு மெதுவாக அழுத்தவும். உடனடியாக வெந்நீரை அதில் ஊற்றி மூடவும். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஸ்ட்ராங்கான டிகாஷன் தயார்.

1/1/2 கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். ½ கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில் விடவும். அதில் ¾ கப் பாலும் அளவுக்கு ஏற்ப சர்க்கரையும் சேர்த்து தம்ளரில் நுரை பொங்க ஊற்றி வைக்கவும். நறுமணத்துடன் டிகிரி காப்பி தயார்.     

Sunday, 26 February 2017

பட்டாணி புலாவ்

                      பட்டாணி புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி             : 200 கிராம்
பட்டாணி (காய்கறி)       ; 150  கிராம்
கேரட்                      :  50 கிராம் 
பல்லாரி வெங்காயம்     :  2
இஞ்சி, பூண்டு             : சிறிதளவு
பச்சை மிளகாய்           :  4
ஏலம்,                      : 1 ஸ்பூன்
கிராம்பு                    : 1/2 ஸ்பூன்
பட்டை                     : சிறிது
நெய் ,வெண்ணை        : சிறிது அளவு
உப்பு                       : தேவைக்கு

செய்முறை:

வாணலியில் நெய், வெண்ணை 2  ஸ்பூன் விட்டு, ஏலம், கிராம்பு, பட்டை
போட்டு வறுத்து, அதில் பல்லாரி வெங்காயம் சிலைஸுகளாக வெட்டிப் 
போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் ஊற வைத்த பட்டாணி, 
கேரட்டைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். 
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.

தேங்காய்ப் பாலில் ஊற வைத்த பாசுமதி அரிசியை குக்கரில் ஒன்றரை மடங்கு 
தண்ணீர் விட்டு வெந்ததும், அதை வாணலியில் போட்டு, உப்பும் இட்டு, நன்றாக
கிளறவும். தேங்காய்ப் பாலில் பாசுமதி அரிசி ஊறியிருப்பதால் சாதம் நிறம்
வெண்ணிறமாக இருக்கும்.

சுவையான பட்டாணி புலாவ் ரெடி.

துணை:  துவரம் பருப்பு தால்  -  செய்முறை:

துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு தேவையான தண்ணீருடன்
குக்கரில் வைக்கவும். 
வாணலியில் உள்ள எண்ணையில் 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு, சீரகம் 
பொரிந்தவுடன்  பல்லாரி, தக்காளி, ப.மிளகாய் சிறிதாக நறுக்கி போட்டு
வதக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை வாணலியில் இடவும்..
தால் ரெடி.


                      

  

கூட்டாஞ் சோறு

                    கூட்டாஞ் சோறு


தேவையானவை

அரிசி                 : 500 கிராம்
துவரம் பருப்பு          : 500 கிராம்
புளி                  : 20 கிராம்
காயம், மஞ்சள் தூள்,      (சிறிது அளவு)
உப்பு  
தேங்காய்              : சிறியது ஒன்று
நல்ல எண்ணை         : 100 கிராம்
காய்கறிகள்:

வழைக்காய்     -  ஒன்று
கத்திரிக்காய்     -  200 கிராம்
முருங்கக்காய்   -   இரண்டு
மாங்காய்       -   ஒன்று
உருளைக்கிழங்கு_  - 200 கிராம்
காரட்          -  200 கிராம்
அவரைக்காய்      -100  கிராம்
கொத்து அவரைக்காய்100 கிராம்
பீன்ஸ்            100  கிராம்
சின்ன வெங்காயம்   200 கிராம்

செய்முறை:

குக்கரில் அரை லிட்டர் தண்ணீரில் துவரம் பருப்பை,மஞ்சள் தூள், காயம் சேர்த்து
சிறிது நேரம் (பருப்பு கால் வாசி வெந்ததும்)வேக வைக்கவும். பின்பு அதில் களைந்து
வைத்த அரிசியை போட்டு 1 1/2 லிட்டர் சூடான வென்னீர் விடவும். அதில் நறுக்கி
வைத்த எல்லா காய்கறிகளையும் போடவும். 

பாதி மூடி தேங்காய் துருவி, அதில் ஒரு ஸ்பூன் சீரகம்,12 வரமிளகாய்,10 சின்ன வெங்காயம், 10 பூண்டு பல் சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து அரிசி, பருப்பு காய்கறிகள் 3/4 வாசி வெந்தவுடன்போடவும். கரைத்த புளித்தண்ணீரை விடவும். உப்பு தேவையான அளவு போடவும்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் பக்குவமாக வெந்தவுடன் அதில் ,வானலியில் 100 கிராம் நல்ல எண்ணையில் கடுகு, கறி வேப்பிலை 20 சின்ன வெங்காயம் தாளித்து/வதக்கிப் கூட்டாஞ் சோறில் போடவும்.

இதுதான் மேல் நாட்டினர் விரும்பி சாப்பிடும் வெஜிடபில் ரைஸ். நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்தது.  பதினெட்டாம் பெருக்கு அன்று ஆறு இருக்கும் இடம் தேடி நம்மவர்கள் இந்த கூட்டாஞ் சோறை எடுத்து சென்று மிகவும் விரும்பி  உண்பார்கள்.

பொருத்தமான தொடு வகைகள்:

1. அப்பளம்,  2, வடகம்,   3.எல்லா விதமான சிப்ஸ்.

4. வெங்காய தயிர் பச்சடி:( செய்முறை)

3 பல்லாரி வெங்காயம்,  மூன்று பச்சை மிளகாய் எடுத்து பொடியாக வெட்டவும். அதை 200 கிராம்   தயிரில் போடவும். கொத்து மல்லி இலை நன்றாகக் கழுவி, வெட்டிப் போடவும். சிறிது உப்பு இடவும்.





உளுந்தப் பருப்பு சோறு

                                   உளுந்தப் பருப்பு சோறு


தேவையானவை

அரிசி                  : 500 கிராம்
உளுந்தம் பருப்பு         : 200 கிராம்
(உடைத்தது)அல்லது
கருப்பு உளுந்து
தேங்காய்              :  1 மூடி
பூண்டு                 20 பல்
வெந்தயம்            : 1 ஸ்பூன்
உப்பு                 : சிறிது

செய்முறை:

உளுந்தம் பருப்பை  வாணலியில் சிறிது வறுத்து எடுக்கவும்.
களைந்து வைத்த அரிசியும், வறுத்த உளுந்தம் பருப்பையும், 1 ஸ்பூன்
வெந்தயம், 20 பல் பூண்டு சேர்த்து 2 லிட்டெர் தண்ணீரில் குக்கரில்
பக்குவமாக வேக வைக்கவும். தேவையான உப்பு இடவும்.

தேங்காய் துருவி சாதத்தின் மேல் இடவும்

சுவையான, மிகவும் சத்துள்ள உணவு தயார். எல்லோரும், குறிப்பாக இளம்,
வயதான பெண்கள் விரும்பும் உணவு.

உளுந்தம் பருப்பு: தொலி உள்ளது அல்லது தொலி நீக்கியது,
அவரவர் விருப்பம்.

பொருத்தமான துணை உணவு:

1. அப்பளம், 2 வெங்காய வடகம்,  3. எல்லா விதமான சிப்ஸ்.

4. எள்ளு துவையல்:  (செய்முறை)

  எள்ளு  : 50  கிராம்
  சிறிய மூடி தேங்காய் , வர மிளகாய் 5, சிறிது புளி, உப்பு (தேவை)
  மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  எள்ளு சட்னி தயார்.

5. கத்திரிக்காய் கொத்சு:

  கத்திரிக்காய்  - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம்
  மிளகாய் -5, புளி - நெல்லி அளவு, உப்பு(தேவை) காயம் - சிறிது

  கத்திரிக்காய் 4 ஸ்பூன் எண்ணயில் வதக்கி  மசித்து சிறிது தண்ணீரில் வேக வைக்கவும்.   அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், புளி, உப்பு  போட்டு, பிறகு கடுகு, கறிவேப்பிலை   இட்டு தாளித்து இடவும்.