Sunday, 30 October 2016

Preface திருநெல்வேலி சைவ சமையல் புத்தகம்

                                                              முன்னுரை

இந்த உலகத்தில் மிகவும் சிறந்த நாடு இந்தியா என்று எல்லோரும் கருதுவதன்  காரணம், இந்தியாவில்  ஆன்மிகம் , ஒழுக்கம் , சிறந்த கல்வி, மதச் சார்பின்மை, சுவையான ஆரோக்கியமான உணவு உண்ணும் வழக்கம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டுதான் . உலகத்தில் சிறந்த நாடு இந்தியா என்றால், இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை .

இத்தகுத்  தமிழ்நாட்டில் அழகிய பொதிகை மலையில் பிறந்து, பற்பல இடங்களை கடந்து வந்து, வளம் பெருக்கி, மக்களின் தாகம் தீர்த்து, ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும், தாமிரபரணி என்னும் பொருணை நதி  ஓடும் ஊர்தான் எங்கள் திருநெல்வேலி. வான் பொய்த்தாலும் தான் பொய்யா வற்றாத ஜீவ நதி தாமிரபரணி. தமிழ் நாட்டில் உள்ள காவேரி ,தென்பெண்ணை, பாலாறு, வைகை  என எல்லா ஆறுகளுமே மழையை நம்பி அல்லது மற்ற மாநிலங்களையோ இருக்கும் போது, பொருணை நதியிலோ அதிக மழை இல்லாத கடுமையான கோடையிலும் ஊற்றுப் பெருக்கால் தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பது உண்மையிலேயே அதிசயம்.
 
பொதிகைத் தென்றல் தாலாட்டும் திருநெல்வேலி என்பது மிகவும் பழமை வாய்ந்த ஊர் என்பதுவும், பாண்டிய, சோழ மன்னர்களால்.ஆளப்பட்டது என்பதுவும், முக்கியமாக கி பி ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட அதி அற்புதமான சுவாமி நெல்லையப்பர் கோவில் உள்ளதுவும் நாம் எல்லோரும் அறிந்ததே..      

திருநெல்வலி தான் சைவ பிள்ளைமார்கள் அதிகம் வாழும் இடம். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இருப்பதும் இங்கேதான். அவர்களின் உணவுப் பழக்க, வழக்கங்கள் , உபசரிப்பு குணநலன்கள் பாராட்டுக்கு உரியவை. இந்த புத்தகம் மூலமாக அவர்களின் முக்கிய சில சுவையான சைவ உணவு சமைக்கும் முறைகளை சுவைபட விளக்கியிருக்கிறோம் .

திருநெல்வேலியில் ஆண்களோ அல்லது பெண்களோ சூரியன் உதிக்கு முன்பே விழித்தெழும் பழக்கம் உடையவர்கள். திருநெல்வேலியின் டவுண், ஜங்ஷன், பாளையங்கோட்டை என்ற மூன்று பகுதியில் உள்ளவர்களுக்கும் ஜீவநதி  தாமிரபரணிதான். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அந்த புனித நதியில் குளிப்பது அவர்களின் பழக்கம். பெண்கள் கரையோரம் குளித்து விட்டு, நதியின் மத்தியில் வேகமாக ஒடும் சுத்தமான தண்ணீரை ஒரு குடம் பிடித்து அவர்கள் தங்கள் இடுப்பில் குடத்தை ஒரு பிள்ளை போல் சுமந்து வருவது,வும் அந்த தண்ணீரில்தான் வீட்டு சமையல் செய்வதும் அந்த நாட்களில் பழக்கம். எனவே தாமிரபரணித் தண்ணீர் அல்வா செய்ய மட்டும் ருசி தருவது அல்ல, எல்லா விதமான உணவுக்கும் சுவை கொடுப்பது அந்தத் தண்ணீர்தான். உணவு வகைகளை சுவைபட செய்து பழகிய பின்னர், இவர்கள் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், இந்தச் சுவையை மறப்பதில்லை, மறக்காமல் கூடவே எடுத்துச் செல்கின்றனர்.

இருப்பினும் சில உணவு தயார் செய்யும் முறை கைவழி முறையாகவே (நல்ல தமிழ் செவிவழி என்பது போல) இருப்பதாலும், இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பெண் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கவோ, படிப்பில் தீவிரமாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொள்ளவோ நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை!

சிறு தானியங்கள் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் , அந்த சிறு தானியங்களில் உள்ள பல  விதமான சத்துக்கள் பற்றியும்  டாக்டர்  கு.சிவராமன் நிறைய எழுதியிருக்கிறார்;  பல சந்தர்ப்பங்களில் பேசியும் இருக்கிறார்.  டாக்டர் கு. சிவராமனுக்கு நன்றி சொல்ல நாம் எல்லோருமே கடமைப் பட்டிருக்கிறோம். சமீப காலங்களில் எல்லா தரப்பு மக்களுமே சிறு தானியங்களின் சிறப்புகளை உணர்ந்து உண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனவே சிறு தானியங்கள் உபயோகித்து  சில விதமான உணவு வகைகளைத் தயார் செய்யும் முறைகளையும் விரிவாக  விளக்கியிருக்கிறோம்

நல்ல சுவையோடு உணவு தயாரிக்கும் பெண் ஒரு கணவனுக்குக் கிடைத்த பரிசு! தன் பிள்ளைகளுக்குக் கிடைத்த வரம்!. மற்ற உறவினர்களும், நண்பர்களும் போற்றும் பெண்! நீச்சல் என்ற கலை பற்றி புத்தகத்தில் படித்தால் மட்டும் போதாது. தண்ணீரில் இறங்கி கற்றால்தான் நீச்சல் கலையை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அது போலவே சமையல் கலையும்!

இந்த அருமையான புத்தகத்தைப் படித்தால் மட்டும் போதாது, புத்தகத்தில் விளக்கியுள்ள உணவு தயாரிக்கும் முறைகளை கவனமாகப் படித்து, தொடர்ந்து முயற்சி செய்தால், விரைவில் நிச்சயம் சுவை மிகுந்த சமையல் உங்கள் கைவந்த கலையாக ஆகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லைசுவையான உணவு என்பது தேவையான உணவை உண்ணத் தூண்டும்; தேவையான உணவு என்பது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவசியம் அல்லவா?   

ஆங்கில அகராதி , திருக்குறள் போல இந்த புத்தகமும் சுவை விரும்பும் எல்லோரது வீட்டிலும் இருக்க வேண்டும் என்பதாலேயே மிகவும் மலிவு விலையில் கிடைக்க பதிப்பிக்கிறோம்.

இந்த புத்தகத்தின் நோக்கம்:

எல்லோரும் சுவையான உணவு வகைகளை  நன்றாக சுவைத்து உண்டு, உடல், மன ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வையத்து வாழ்வாங்கு வாழ விரும்புகிறோம்.


Saturday, 29 October 2016

அதிரசம்

அதிரசம்

தேவையானவை:

பச்சைஅரிசி            : 500    கிராம்
வெல்லம்                   :  750    கிராம்  
ஏலம்                           :  1   ஸ்பூன்
எண்ணெய்               :  500    கிராம்

செய்முறை:

பச்சரிசியை 2  மணி நேரம் ஊற வைத்து ,  தண்ணீரை நன்றாக வடிகட்டி, வெள்ளைத் துணியில் 20 நிமிடம் காய வைத்துப் பிறகு மிக்சியில் மாவு மாதிரி திரித்து எடுக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அகண்ட கனமான வாணலியில் இட்டு கம்பிப் பக்குவத்தில் தயார் செய்யவும். பிறகு சல்லடையில் வடிகட்டி, வாணலியின் அடிப்பாகத்தில்  உள்ள  மண்டியை வெளியே கொட்டவும்.

மறுபடியும் வானலியில் வெல்லப் பாகை விடவும். அதில் பச்சரிசி மாவைப் போட்டு
நன்றாக கிண்டவும். இந்த கலவையை 24 மனி நேரம் மூடி வைக்கவும்.

அதன் பின் சிறிய வடிவில் வட்டமாக இலையில் தட்டி அதை  வாணலியில்  உள்ள எண்ணையில் போட்டு பொன்னிறாமாக வெந்து எடுக்கவும்.

சுவையான அற்புதமான அதிரசம் தயார்.

குறிப்பு:

தீபாவளி அன்று இந்த இனிப்பு திருநெல்வேலி  வீடுகளில்   கண்டிப்பாக உண்டு.